அருகம்பையில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

அருகம்பையில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்

 



அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை – சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (28) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகள் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக காணப்படுவதுடன், தினமும் பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிகளுக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், அண்மைக்காலமாக குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடுவதால், அருகம்பை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உடனடியாக தலையிட்டு, குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About Lanka Theepam